வயல் காணிகளை பகிர்ந்தளிக்க வேண்டும் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

பெரும்போக நெற் செய்கைக்கு முன்னதாக வயகாணிகளை பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் நிறைவடைய வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

ஜெயபுரம் பிரதேசத்தில் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட வயல் நிலங்களில் ஒரு பகுதியினை வன்னேரிக்குளம் பிரதேச மக்கள் உரிமை கோரியிருப்பது தொடர்பான பிரச்சினை, மற்றும் கௌதாரி முனையில் வயல் காணிகளுக்காக விண்ணப்பித்திருக்கின்றவர்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்தல் ஆகிய செயற்பாடுகளை பெரும்போக நெற் செய்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக, பருவ காலத்திற்கு முன்னதாக நிறைவு செய்யுமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமைகளை ஆராயும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (16) நடைபெற்ற மெய்நிகர் வழியூடான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

விவசாய செயற்பாடுகளும் அத்தியாவசிய சேவையாக உள்ளடக்க பட்டுள்ளமையினால் விவசாய நடவடிக்கைகளுக்கான காணி வழங்கும் செயற்பாடுகளுக்கும் அதிகாரிகள் முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

சட்ட விரோத மணல் அகழ்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு, இயற்கை வளங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாத வகையிலும் மக்கள் நியாயமான விலையிலும் மணல் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பாக தென்னிலங்கை ஊடகங்களில் வெளியாகிய செய்தியினை சுட்டிக்காட்டிய அமைச்சர், குறித்த சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான பிரதேச பொலிஸ் தரப்பினரின் ஆலோசனைகளைக் கேட்டறிந்தார்.

மணல் அனுமதிப் பத்திரங்களில், மணல் அகழ்விற்கு அனுமதிக்கப்படுகின்ற பிரதேசங்கள் மற்றும் மணல் ஏற்றும் வாகனங்களின் பயணப் பாதைகள் போன்றவை தெளிவாக சுட்டிக்காட்டப்படுமானால் இலகுவாக சட்ட விரோத மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்த பொலிஸ் தரப்பினர், சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தனர்.

மக்களுக்கு தேவையான மணலினை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றமையும் சட்டவிரோத மணல் அகழ்விற்கு காரணமாக இருக்கின்றது என்ற கருத்தும் இதன் போது முன்வைக்கப்பட்டது.

மணல் அகழ்விற்கான அனுமதிகளைப் பொருத்தமானவர்களுக்கு வழங்குவதில் காணப்படுகின்ற நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டினுள் இருக்கின்ற காட்டுப் பிரதேசத்தில் மணல் அகழ்விற்கு பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்துவதுடன், அவ்வாறான பிரதேசங்களில் இருந்து மணல் அகழ்வினை மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபருடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறு வனப் பாதுகாப்பு அதிகாரிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுக் கொண்டார்.

Exit mobile version