பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்!

இலங்கையில் இதுவரை கொரோனா தடுப்பூசி தொடர்பான சுகாதார அட்டை நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதவர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்காதிருப்பதற்கோ அல்லது வீதிகளில் பயணிக்காதிருப்பதற்கோ எந்த வித நடைமுறைகளும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வைத்தியர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனின், அதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டமைக்கான அட்டை இல்லாதவர்களை கடந்த சில தினங்களாக வீதி கடவைகளை கடந்த செல்ல அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பிலும் இதன் போது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹேமந்த ஹேரத், சுகாதார அமைச்சினால் அவ்வாறான அறிவிப்புக்கள் பிறப்பிக்கப்படவில்லை என கூறினார்.

எனினும், நாட்டிலுள்ள வேறு ஏதேனும் சட்டங்களின் பிரகாரம், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தால், அதற்கு தாம் பொறுப்பு கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

Exit mobile version