கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி!

கிளிநொச்சி மாவட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சரவணபவன் தலைமையிலான சுகாதார வைத்திய அதிகாரிகள், மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் கடுமையான முயற்சிகளின் பலனாகக் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்றையதினம்(16) 39 ஆக வீழ்ச்சியடைந்தது.

ஆகஸ்ட் மாத இறுதியில் நாள் ஒன்றுக்கு 267 வரையில் அதிகரித்திருந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை, படிப்படியாக வீழ்ச்சியடைந்து நேற்றையதினம் அது 39 ஆகப் குறைவடைந்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து அதனைக் கட்டுப்படுத்துவதற்குப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சரவணபவன் தலைமையிலான சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும், கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனை மருத்துவர்கள், தாதியர் மற்றும் ஊழியர்களும் கடுமையான முயற்சிகளை எடுத்து வந்தனர்.

மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையிலான மாவட்ட கோவிட் கட்டுப்பாட்டு செயலணியில் அங்கம் வகிக்கும் பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் இதற்கு வேண்டிய முழு ஒத்துழைப்பையும் வழங்கி, தனிமைப்படுத்தப்பட்டோருக்கான நிவாரணம் உள்ளிட்ட விடயங்களை உரிய முறையில் கையாண்டனர்.

இந்த முயற்சிகளின் விளைவாக செப்டெம்பர் மாத முற்பகுதியிலிருந்து படிப்படியாக வீழ்ச்சியடைந்து வந்த தொற்றாளர் எண்ணிக்கை நேற்றையதினம் 39 ஆகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நாடாளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் கோவிட் தொற்று நிலை எதிர்வரும் நாட்களில் மேலும் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகப் பிராந்திய சுகாதார சேவைகள் மாவட்டப் பணிப்பாளர் சரவணபவன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version