மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க கூடாது! தேரர் போர்க்கொடி!

கோவிட் தடுப்பூசிகள் குறித்த ஆய்வுகள் நிச்சயமற்ற நிலையில் இருக்கும் நேரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கக் கூடாது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதில் விஞ்ஞான ரீதியில் ஒருமித்த கருத்து இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படக் கூடாது.

தடுப்பூசியை உடலில் செலுத்திய பின் அதனை மனித உடலில் இருந்து எடுக்க முடியாது. இந்த உண்மை புறக்கணிக்கப்பட கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை தடுப்பூசி செலுத்தப்படும் மாணவர்களின் வயதெல்லையை தீர்மானிக்கும் கலந்துரையாடல் இன்று இடம்பெறுகிறது.

பாடசாலைகளை மீளத் திறப்பதை அடிப்படையாக கொண்டு இந்த கலந்துரையாடல் அமையவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, முன்பள்ளி முதல் தரம் ஆறு வரையிலான மாணவர்களுக்கா? அல்லது 12 முதல் 13 வரையான மாணவர்களுக்கா? தடுப்பூசி வழங்குவது என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்தின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகளின்படி, 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு ஏதாவதொரு தாக்கநிலை ஏற்படக்கூடும் என்ற கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

எனவே இதுபோன்ற உலக நிலைமைகளை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டியுள்ளது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பிரச்சினை உள்ளது. எனவே இவை அனைத்தையும் முகாமைத்துவம் செய்து, செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Exit mobile version