நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் இருந்து மீட்கப்பட்டிருந்த கைக்குண்டு வெடிக்கும் வகையில் தாயாரிக்கப்பட்டு இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த, கைக்குண்டு தொடர்பிலான விரிவான விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தனியார் வைத்தியசாலையின் முதலாவது மாடியிலுள்ள மலசலகூடத்திலிருந்து நேற்றைய தினம் இந்த கைக்குண்டு மீட்கப்பட்டிருந்தது.
கைக்குண்டின் பாதுகாப்பு ஆணியை கழற்றி, நுளம்பு சுருளொன்றை இணைத்து, வெடிக்கும் வகையில் இந்த கைக்குண்டு தயாரிக்கப்பட்டுள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மூவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களின் ஊடாக ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் விடயங்களை ஆராய்ந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன், விசாரணைகளை துரிதப்படுத்துமாறு விசாரணை குழுவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.