இலங்கை

ஐநா தீர்மானத்தை நிராகரிப்பதாக இலங்கை அரசு அறிவிப்பு!

இலங்கை குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46/1 தீர்மானத்திற்கு கீழே நிறுவபடக்கூடிய அனைத்து வெளியக பொறிமுறைகளையும் முழுதாக நிராகரிக்கிறோம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணையாளரது இலங்கை தொடர்பான வாய்மொழி மூலமான அறிவிப்பு குறித்து பதிலளித்து அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்தோடு இலங்கை அரசின் ஒத்துழைப்பு இல்லாத வெளியகப் பொறிமுறைகளினால் எவ்வித பயனும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும், உள்நாட்டு செயன்முறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும், காணாமல் போனவர்கள் குறித்த அலுவலக நடவடிக்கை, இழப்பீட்டு அலுவலக நடவடிக்கை ஆகியவை பற்றியும் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அரசியலமைப்பிற்கு அமைவாக அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்பட இலங்கை தயார் என்றும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பொறுப்புக்கூறல் மற்றும் காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும், கடந்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்காக உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டு அதன் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் இறுதி அறிக்கை அடுத்த 06 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், சர்வதேச விதிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப கொண்டுவரவும் அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள வழக்குகளை விசாரணை செய்யவும், வழக்குகளை விரைந்து தீர்ப்பது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

அத்தோடு 8 அம்ச செயற்றிட்டத்தை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் ஆணையை நிறைவேற்றுகின்றது என்றும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

மேலும் சமாதானம், நீதி மற்றும் வலுவான நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நிலையான அபிவிருத்தி இலக்கு 16 இன் கீழான வழிநடத்தல் குழு செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கு சிவில் சமூகத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து இலங்கை தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button