ஆப்கானிஸ்தானை கைப்பற்றி வைத்துள்ள தலிபான் அமைப்பு புதிய அரசினை அமைப்பது தொடர்பில் ஏற்பட்ட கைகலப்பினால் தலிபானன் அமைப்பினது தலைவர் காயமடைந்துள்ளார்.
ஆப்கானின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடியமையினால் ஆட்சி அதிகாரம் தமது வசமுள்ளதாக அறிவித்த தலீபான்கள் விரைவிலே புதிய அரசு அமையும் என தெரிவித்தனர்.
கடந்த 30ம்திகதி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க இராணுவம் முற்று முழுதாக வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தலிபான் அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரும் அமைப்பின் தற்போதைய தலைவருமான முல்லா அப்துல் கனி பரதருக்கு அதிபர் பதவி வழங்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான் அமைப்புக்கும் ஹக்கானி வலைக்குழுவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்போது ஹக்கானி குழுவின் தலைவர் ஆனஸ் ஹக்கானிக்கும் தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதன்போது முல்லா அப்துல் கனி பரதர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இரு தரப்பினையும் சமாதானப்படுத்தி பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்ப்பதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவர் பைஸ் ஹமீது காபூலுக்கு விரைந்துள்ளார்.